Skip to content Skip to sidebar Skip to footer

Pasumai Vikatan 2015 Pdf Free Download

பழைய பொருட்களில் விதவிதமான செடிகள்..!

ஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில்... வீட்டில் விவசாயம் செய்ய தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. இதழ்தோறும் வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம் பிடிக்கின்றன.

வீட்டு மொட்டைமாடியில் காய்கறி பயிர் செய்து வரும் ஈரோடு சரஸ்வதி, பழைய பொருட்களை வைத்து தொட்டிக் காய்கறிகளை வளர்க்கும் விதம் குறித்து இங்கே பேசுகிறார்.

வீட்டுக்குள் விவசாயம் - 2

'மாடித்தோட்டம் அமைப்பதற்கு அடிப்படைத் தேவை மண் மற்றும் தொட்டிகள். இவற்றை எங்கே சேகரிப்பது என்ற கேள்வியில் தொடங்கும் சோம்பல்தான், உங்கள் வீட்டில் விவசாயம் நடக்காமல் இருப்பதற்கான அடிப்படைக் காரணம். யோசனை செய்து கொண்டிருந்தால் வேலை நடக்காது. எதுவுமே வீடு தேடி வந்து வாசல் கதவைத் தட்டாது. தற்போது கட்டட வேலை நடக்காத இடங்களே இல்லை. நமக்கு அருகே கட்டட வேலை நடக்கும் இடத்துக்குச் சென்று, அஸ்திவாரம் தோண்டி குவித்து வைத்திருக்கும் மண்ணில், மேல்மண்ணாகப் பார்த்து எடுத்து வரலாம். எந்த நகரத்தில் இருந்தும் அதிகபட்சமாக ஒரு மணி நேர பயணத்தில் விவசாய நிலங்களைக் காணலாம். அந்த நிலத்தின் உரிமையாளரைச் சந்தித்துக் கேட்டால் தேவையான மண் கிடைக்கும். அதேபோல மாட்டுச் சாணத்தையும் தேடிப் பெறலாம். இவை நகரங்களிலும் கூட கிடைக்கும்.

வீட்டுக்குள் விவசாயம் - 2

குறைந்த செலவில் தொட்டிகள்!

மண், சாணத்துக்கு அடுத்தது செடி வளரத் தேவையான தொட்டி. இதற்காக அதிக செலவு செய்து புதுத் தொட்டிகளை வாங்கத் தேவையில்லை. வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கும் பழைய டப்பாக்கள், வாட்டர் கேன்கள், பக்கெட்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கலாம். லாரிப் பட்டறை, கார் ஒர்க் ஷாப் போன்ற மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களில் பழைய ஆயில், பெயின்ட் பக்கெட்டுகள், கிரீஸ் டப்பாக்கள் கிடைக்கும். காயலான் கடைகளில் கிடைக்கும் பழைய சின்டெக்ஸ், தகரங்கள், பெரிய பி.வி.சி பைப்கள் மற்றும் பழங்களை அடுக்கப் பயன்படுத்தும் மரப்பெட்டிகள் ஆகியவற்றை வாங்கி வந்தும் செடி வளர்ப்புத்தொட்டிகளாகப் பயன்படுத்தலாம். இவற்றுக்கு அதிக செலவு பிடிக்காது. கிரீஸ் டப்பாக்களில் எண்ணெய் வாசம் போகும்படி நன்றாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.

வீட்டுக்குள் விவசாயம் - 2

புதிதாக வீட்டுத்தோட்டம் அமைப்பவர்கள், அனைத்து காய்கறிகளையும் ஒரே நேரத்தில் நடவு செய்யாமல், 25 நாட்களில் அறுவடையாகும் கீரையிலிருந்து தொடங்கலாம். அதில் அனுபவத்தை வளர்த்துக் கொண்ட பிறகு மற்ற காய்கறிகளை விதைக்கலாம். மாடித்தோட்டத்துக்கும் பட்டம் உண்டு. எல்லா ஊரிலும் எல்லா காய்கறிகளும் வளரும் என்றாலும்... சில ஊரில் சில பயிர்களின் வளர்ச்சி மந்தமாக இருக்கும். அதை ஈடுசெய்ய நிழல்வலைப் பந்தல், மூடாக்கு போன்ற சில தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்க வேண்டும். அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.

வீட்டுக்குள் விவசாயம் - 2

முதலில் கீரை சாகுபடியைப் பற்றி பார்ப்போம். வீட்டுத் தோட்ட விவசாயத்தில் மண் மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு தொட்டிக்கு ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல் மற்றும் ஒரு பங்கு எரு என்கிற விகிதத்தில்தான் கலந்து போட வேண்டும். செம்மண் அல்லது வண்டல் மண்ணைத் தரையில் கொட்டி, கல், கட்டிகளை அகற்றி பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், தென்னை நார்க்கழிவை (காயர் பித்) வாங்கி, மண்ணில் கலந்துகொள்ளலாம். ஒரு தொட்டிக்குத் தேவையான மண், மணல் மற்றும் உரத்துடன் 50 கிராம் அசோஸ்பைரில்லம், 25 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றையும் கொட்டிக் கலந்து தொட்டியில் முக்கால் பங்கு நிரப்ப வேண்டும். பிளாஸ்டிக் வாளிகளாக இருந்தால், அவற்றின் அடிப் பகுதியில், சுற்றிலும் கோணி ஊசி புகும் அளவுக்கு 12 இடங்களில் சிறு துவாரங்கள் இட வேண்டும். செடிகளுக்கு ஊற்றும் தண்ணீரில் தேவைக்கு அதிகமான தண்ணீர் வடிய இந்தத் துவாரங்கள் அவசியம். தொட்டிகளில் மண் நிரப்பி தண்ணீர் ஊற்றி மூன்று நாட்கள் அப்படியே வைத்திருந்தால், மூன்றாவது நாள், மண் ஈரத்தன்மை குறைந்து காணப்படும். அதில் விதையையோ அல்லது நாற்றையோ நடவு செய்யலாம்.

வீட்டுக்குள் விவசாயம் - 2

கிச்சனில் இருக்கு, கீரை விதை!

அடுத்து 'விதைக்கு எங்கே போவது?' என்ற கேள்வி எழும். ஆரம்ப கட்டத்தில் சமையலறையில் உள்ள வெந்தயத்தையே விதைக்கலாம். ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உடைய இந்தக் கீரையை விதைக்க... கையளவு வெந்தயத்தை எடுத்து சுத்தப்படுத்தி, மண் நிரப்பி தயாராக உள்ள பக்கெட்டில் தூவி விதை மறையும்படி மண்ணைக் கிளறி விட்டு பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கவேண்டும். அடுத்த நான்கு நாட்களில் கீரை துளிர்க்கும். இப்படித் துளிர்த்து வரும்போது வெந்தயக்கீரைக்கு வெயில் அதிகம் இருக்கக் கூடாது. தென்னை ஓலை அல்லது நிழல்வலை மூலமாக வெயிலைக் குறைக்கலாம். களைகள் தென்பட்டால் கையால் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். 10-ம் நாளில், 100 கிராம் மண்புழு உரத்தை மேலுரமாகத் தூவிவிடவேண்டும் (இது நர்சரிகளில் கிடைக்கும்). தினமும் நீர் தேங்காத அளவுக்கு தண்ணீர் தெளித்து வந்தால், கீரை 'தளதள' என வளர்ந்து, 25-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

வீட்டுக்குள் விவசாயம் - 2

தொடர்ந்து, பாலக் கீரை, கொத்தமல்லித்தழை, அரைக்கீரை, சிறு கீரை, மணத்தக்காளி போன்ற கீரைகளையும் தொடர் அறுவடை கொடுக்கக்கூடிய செங்கீரை, புதினா போன்றவற்றையும் வளர்க்கலாம். கீரை விவசாயத்தை வெற்றிகரமாக முடித்து அனுபவம் பெற்ற பிறகு, காய்கறி விவசாயத்தின் பக்கம் கவனம் செலுத்தலாம்.

மண் நிரப்பிய வாளியை மாடியில் வைக்கும் போது, நேரடியாகத் தரையில் வைக்கக்கூடாது. மூன்று செங்கற்களை அடுப்பு போல கூட்டி அதன் மீது வைக்கலாம். நிறைய தொட்டிகளை வரிசையாக வைக்கும்போது நீளமான மரப்பலகையின் மீது தொட்டிகளை வைக்கலாம். கீரைகள் வளர்க்க மிதமான சீதோஷ்ணம் தேவை. நன்றாக வெயில் கொளுத்தும் மாதங்களில் பகல் நேரங்களில் கீரைத் தொட்டிகள் மேலே நிழல் வலை அமைக்க வேண்டும். மாலை நேரங்களில் பந்தலை விலக்கிக் கொள்ளலாம்.

வீட்டுக்குள் விவசாயம் - 2

கோடை காலங்களில் நிழல்வலை பயன்படுத்தினால், அதிக மகசூல் எடுக்கலாம். 10 லிட்டர் ஆயில் பக்கெட்டில், 5 கிலோ கீரை மகசூல் கிடைக்கும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வழியாதபடி தார்பாலின் பந்தல் அமைத்துக் கொள்ளலாம்.

முட்டைஓடு... பூச்சியே ஓடு!

மாடித்தோட்டத்தில் பெரும்பாலும் பூச்சித்தாக்குதல் இருக்காது. அப்படியும் தென்பட்டால், முட்டை ஓட்டுத்தூளுடன், சிறிது உப்பைக் கலந்து பக்கெட்டை சுற்றிலும் வளையம் போட்டால் பூச்சிகள் அண்டாது.

Posted by: carlocarlopoynore0268509.blogspot.com

Source: https://www.vikatan.com/literature/agriculture/103912-

Post a Comment for "Pasumai Vikatan 2015 Pdf Free Download"